முதலமைச்சராக ‘முதல்’ பிறந்தநாள்... விஜய்க்கு வாழ்த்து மழை!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு , பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை உலகப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலதரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாக இருந்து, கடந்த மே 10-ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், இன்று தனது 52-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிகராகப் பல பிறந்தநாட்களைக் கொண்டாடியிருந்தாலும், மக்கள் பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏந்திய பின், மாநிலத்தின் முதல் குடிமகனாக அவர் கொண்டாடும் ‘முதல்’ பிறந்தநாள் இது என்பதால் தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இந்நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் முகாம் அலுவலகத்தை நோக்கி இன்று காலை முதலே பொதுமக்கள், தவெக நிர்வாகிகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டுத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தவெக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் போர்க்கால அடிப்படையில் சமூக நலப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்குதல், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம், ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்குதல் எனப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தொண்டர்கள் வழங்கி வருகின்றனர்.
தற்போது தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று கூடும் பேரவை அமர்வில் முதலமைச்சர் விஜய் ஏழை எளிய மக்களுக்கான புதிய மக்கள் நலத்திட்ட அறிவிப்பு ஒன்றை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.