ஹார்மூஸ் ஜலசந்தியை முடக்க ஈரான் சதி... 4 டிரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா!
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானை கடுமையாக தாக்கின. இதற்கு பதிலடியாக ஈரானும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இருதரப்பிலும் மோதலை முடிவுக்கு கொண்டு வர ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான தாக்குதல்கள் இன்னும் முழுமையாக ஓய்ந்தபாடில்லை.
இந்த மோதல் போக்கு காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஹார்மூஸ் ஜலசந்தியை நோக்கி ஈரான் நாடு ஏவிய 4 ஆளில்லா போர் விமானங்களை (டிரோன்கள்) அமெரிக்க ராணுவம் நடுவானில் சுட்டு வீழ்த்தி அழித்துள்ளது. இந்த வான்வழி அச்சுறுத்தலால் எல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் சரக்கு கப்பல்களின் முக்கிய வழித்தடமான ஹார்மூஸ் ஜலசந்தியை முடக்கும் நோக்கில் ஈரான் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. கடல்சார் போக்குவரத்துக்கு உடனடி அச்சுறுத்தலாக இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதற்கு பதிலடியாக ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க ராணுவம் முற்றுகையிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.