ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் துறைமுகத்துக்குச் சென்ற கப்பல் மீது அமெரிக்கா குண்டுவீச்சு... மீண்டும் போர் பதற்றம்!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் கடுமையான மோதல் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் துறைமுகங்களை முழுமையாக முடக்கும் விதமாக, அமெரிக்கக் கடற்படை தனது முற்றுகை நடவடிக்கையை நேற்று முதல் மீண்டும் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. தங்களது முற்றுகையை மீறி ஈரான் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்திருந்தது.
இந்தச் சூழலில் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகையை மீறி, ஈரான் துறைமுகத்திற்குச் செல்ல முயன்ற குராசோ நாட்டு கொடியுடன் வந்த 'எம்.டி. பெல்மா' என்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் திடீர் ஏவுகணைத் தாக்குதலால் அந்த எண்ணெய் கப்பல் பலத்த சேதமடைந்து அங்கேயே செயலிழக்கச் செய்யப்பட்டது. கப்பலின் புகைபோக்கிக்குள் ஹெல்பயர் ஏவுகணைகளைச் செலுத்தி இந்தத் தாக்குதலை அமெரிக்கப் படைகள் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு விபரங்களை வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலின் தொடர்ச்சியாக ஈரான் நாட்டின் மீது 5 வது நாளாக அமெரிக்க ராணுவம் தனது வான்வழித் தாக்குதலை தீவிரமாகத் தொடர்ந்தது. நள்ளிரவில் தொடங்கி இன்று அதிகாலை வரை நீடித்த இந்தத் தாக்குதலில், ஈரானின் தலைநகர் தெக்ரான் மற்றும் அதன் தெற்குப் பகுதிகளில் உள்ள பல்வேறு முக்கிய நகரங்கள் மீது அமெரிக்கப் படைகள் சரமாரியாகக் குண்டுகளை வீசின. அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதலுக்குப் பதிலடியாகக் குவைத்தில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரானும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.