அறுவடை கூலி கூட கிடைக்கலை... கிலோ ₹4-க்கு விற்கப்படும் வெங்காயம் - கதறும் விவசாயிகள்!
தெலங்கானா மாநிலத்தின் மிகப்பெரிய வெங்காயச் சந்தையான ஹைதராபாத் மலக்பேட் மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது விளைபொருட்களைச் சாலைகளில் கொட்டும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மற்றும் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் இருந்து ஒரே நேரத்தில் அதிகப்படியான வெங்காய மூட்டைகள் மலக்பேட் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான குவிண்டால் வெங்காயம் சந்தைக்கு வந்துள்ளது.
மத்திய ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, வெளிநாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதி முடங்கியுள்ளது. இது உள்நாட்டுச் சந்தையில் தேக்கத்தை உருவாக்கியுள்ளது.
மலக்பேட் சந்தையில் தரமான வெங்காயம் ஒரு குவிண்டால் (100 கிலோ) ₹200 முதல் ₹600 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை மொத்த விற்பனையில் வெறும் ₹2 முதல் ₹6 வரை மட்டுமே கிடைக்கிறது.
ஒரு கிலோ வெங்காயம் உற்பத்தி செய்ய ₹20 முதல் ₹25 வரை செலவாகும் நிலையில், தற்போது கிடைக்கும் விலை போக்குவரத்து மற்றும் சுமை கூலிக்குக் கூட போதுமானதாக இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சந்தைக்குக் கொண்டு சென்றால் நஷ்டம் என்பதால், பல விவசாயிகள் விளைநிலங்களிலேயே அல்லது அருகில் உள்ள சாலையோரங்களில் ஒரு கிலோ ₹3 முதல் ₹4-க்கு வெங்காயத்தை விற்பனை செய்து வருகின்றனர்.
விலை வீழ்ச்சியால் தற்கொலை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தங்களைக் காப்பாற்ற, அரசு உடனடியாகக் தலையிட்டு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், வெங்காயத்தைச் சேமிக்கக் குளிரூட்டப்பட்ட கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.