பயங்கரம்! 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் பலி!

 

 

அரியானா மாநிலம் அம்பாலா அருகே கட்டப்பட்டு வந்த 3 அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அம்பாலா நகரில் உள்ள துல்கோட் கிராமத்தில் 3 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. கட்டுமானப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் 15-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்ததும் போலீசார், அரசு அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியைத் தொடங்கினர்.

தொடர்ந்து நடைபெற்ற மீட்பு நடவடிக்கையில் 13 பேர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டனர். இதற்கிடையே மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்களில் பலர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.