மின்சார வாகனங்களுக்குச் சாலை வரி முழுமையாக ரத்து - ஹரியானா அரசு அறிவிப்பு!

 

மாநிலத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் ஹரியானா மாநில அரசு புதிய சலுகைகள் மற்றும் வரி விலக்குகளை அறிவித்துள்ளது.

ஹரியானா அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி,  ரூ.30 லட்சம் வரை மதிப்பிலான மின்சார வாகனங்களுக்குச் செலுத்த வேண்டிய சாலை வரி  முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான விலை கொண்ட உயர் ரக மின்சார வாகனங்களுக்குச் சாலை வரியில் 50 சதவீதம் வரை விலக்கு அளிக்கப்படும்.

பெண்கள் பெயரில் வாங்கப்படும் ரூ.20 லட்சம் வரையிலான வணிக பயன்பாடு இல்லாத சொந்த மின்சார கார்களுக்குக் கூடுதல் 1 சதவீத வரி விலக்குச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மின்சார வாகன உற்பத்தியையும் பயன்பாட்டையும் அதிகரிக்கும் நோக்கில் ஹரியானா அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, அம்மாநில மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.