பள்ளி வளாகத்தில் மழலையர் வகுப்பு சிறுமி மீது 3-ம் வகுப்பு மாணவன் தாக்குதல்... அதிர்ச்சி வீடியோ!

 

 

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள பள்ளி ஒன்றில், மூன்றாம் வகுப்பு மாணவன் தாக்கியதில் மழலையர் வகுப்பு சிறுமி படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பள்ளி வளாகத்தில் மழலையர் வகுப்பு சிறுமி மீது 3-ம் வகுப்பு மாணவன் தாக்குதல்! https://t.co/aa9JVfXkLM

— Dina Maalai (@DinaMaalai) October 31, 2026

பஞ்ச்குலா செக்டர் 20 பகுதியில் உள்ள பள்ளியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்போது மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன், மழலையர் வகுப்பில் படிக்கும் சிறுமியை செங்கல் மற்றும் பூந்தொட்டிகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் சிறுமி மயக்கமடைந்ததாகவும், அதன்பிறகும் தாக்குதல் தொடர்ந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு, சண்டிகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பள்ளி வளாகத்தில் நடந்த சம்பவத்தின் பின்னணி, மாணவர்களின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சிறுவர்கள் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பெற்றோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.