ரயில்வே கேட்டை முட்டி உடைத்த காட்டு யானை! ஹாசன் பகுதியில் பரபரப்பு

 

 

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில், ரயில்வே கேட்டை காட்டு யானை முட்டி உடைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகாவில் உள்ள ஹசிடே கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், அப்பகுதியில் அவ்வப்போது வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும்.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு ஹசிடே பகுதியில் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை ஒன்று, தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. ஆனால், வழியில் மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டை தனது தும்பிக்கை மற்றும் உடலால் முட்டித் தள்ளி உடைத்துவிட்டு, அங்கிருந்து முன்னோக்கிச் சென்றது.

இந்தச் சம்பவத்தில் பெரிய விபத்து ஏதும் ஏற்படவில்லை. யானை ரயில்வே கேட்டை உடைத்துச் செல்லும் காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர். தற்போது அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.