undefined

2 மகள்கள் இருந்தும் கள்ளக்காதல்... கொலை செய்துவிட்டு காசியில் பரிகாரம்!

 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த காப்பு லட்சுமி (45) என்ற பெண், தனது வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு 'ராங் கால்' மூலம் பொப்பிலியைச் சேர்ந்த சிவா என்பவருடன் லட்சுமிக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. கணவர் மற்றும் திருமணமான இரு மகள்கள் இருந்த போதிலும், லட்சுமிக்கும் சிவாவிற்கும் இடையேயான நட்பு நாளடைவில் நெருக்கமான தொடர்பாகவும் மாறியது. வட்டிக்குத் தொழில் செய்து வந்த லட்சுமியிடம், கிரிக்கெட் சூதாட்டத்திற்கு அடிமையான சிவா பெரும் தொகையை அடிக்கடி வாங்கி வந்துள்ளார். சூதாட்டத்தில் ஒரு கோடி ரூபாய் வரை இழந்த சிவா, தனது கடன்களை அடைக்க லட்சுமியின் நகைகளையும் பணத்தையும் அபகரிக்கத் திட்டமிட்டார்.

போலீசில் சிக்காமல் இருக்கப் பல கி.மீ தள்ளி தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, மூன்று ஆட்டோக்களை மாறி மாறி ஏறி லட்சுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். பணத்திற்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் லட்சுமியின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, 5 சவரன் நகைகள் மற்றும் 5 லட்ச ரூபாய் பணத்தைச் சுருட்டிக் கொண்டு தப்பியுள்ளார். அதன் பின்னர் கொலை செய்த பாவத்தைப் போக்கினால் தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்ற விசித்திரமான எண்ணத்தில், சிவா நேராகக் காசிக்குத் தப்பிச் சென்றார். அங்கு கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதருக்குச் சிறப்புப் பூஜைகளைச் செய்துவிட்டுத் திரும்பியுள்ளார். காசியில் இருந்து திரும்பிய பின், ஒரு வீடியோவை வெளியிட்டுவிட்டுச் சென்னைக்குத் தப்பிச் செல்ல முயன்ற போது போலீசார் அவரைச் சுற்றி வளைத்தனர்.

ஆரம்பத்தில் இது வெறும் நகைப் பறிப்பு வழக்காகத் தெரிந்தாலும், லட்சுமியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போது, சிவா அடிக்கடி வழிப்போக்கர்களின் போன்களை வாங்கிப் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. நுணுக்கமாகத் திட்டமிட்டும் தொழில்நுட்ப ஆதாரங்கள் மூலம் குற்றவாளி தற்போது சிக்கியுள்ளார்.