undefined

மனைவியுடன் தகாத உறவு... கள்ளக்காதலனை அடித்துக் கொன்ற தந்தை -  மகன்!

 

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே, கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மிக்சர் கடை உரிமையாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் தந்தை மற்றும் அவரது கல்லூரி பயிலும் மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னப்பன் (50), திருவள்ளூர் மாவட்டம் மாகரல் பகுதியில் தங்கி மிக்சர் தயாரிப்புத் தொழில் செய்து வந்தார். இவரது கொலையி சம்பவத்தில் போலீசாரின் விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி உள்ளன. 

சின்னப்பனின் மிக்சர் கடையில் மாகரல் மேட்டு காலனியைச் சேர்ந்த சுபாஷ் என்பவரது மனைவி வேலை செய்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இது குறித்துத் தெரிந்த கணவர் சுபாஷ், கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தனது மனைவியை வேலையிலிருந்து நிறுத்தியதுடன், சின்னப்பனைப் பலமுறை கண்டித்துள்ளார். சுபாஷின் எச்சரிக்கையை மீறி, சின்னப்பன் தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் செல்போனில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சின்னப்பன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு சென்ற இருவர், சின்னப்பனிடம் தகராறில் ஈடுபட்டுத் தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்கச் சின்னப்பன் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். இருப்பினும், விடாமல் துரத்திய அந்த மர்ம நபர்கள், அங்கிருந்த மரக்கட்டைகளால் சின்னப்பனை சரமாரியாக அடித்துக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வெங்கல் போலீசார், முதலில் சின்னப்பனிடம் வேலை செய்த ஒடிசா மாநில வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அதில் துப்பு துலங்காத நிலையில், சின்னப்பனின் செல்போன் தரவுகளை ஆய்வு செய்தனர். அப்போது சின்னப்பன் கடைசியாக சுபாஷின் மனைவியுடன் அதிக நேரம் பேசியிருந்தது உறுதி செய்யப்பட்டது.

சுபாஷின் மனைவியிடம் நடத்திய விசாரணையில், தனது கணவர் மற்றும் மகன் இணைந்து சின்னப்பனை அடித்துக் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்தார். இதனைத் தொடர்ந்து பெட்டிக்கடை நடத்தி வரும் சுபாஷ் (39) மற்றும் அவரது கல்லூரி செல்லும் மகன் சக்திவேல் (18) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தங்களது எச்சரிக்கையை மீறித் தொடர்ந்து கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

சின்னப்பனின் உடல் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கைதான தந்தை மற்றும் மகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.