ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பால் விற்பனைக்கு தடை: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
மலைப்பிரதேசமான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அங்கு பாக்கெட் பால் விற்பனைக்குத் தடை விதித்துச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்தக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றச் சிறப்பு அமர்வு, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு மாற்றாக வேறு வழியைக் கண்டறிய உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆவின் நிறுவனம் சார்பில் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் மக்கள்தொகை நெருக்கமான பகுதிகளில் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவதாகத் தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கொடைக்கானலில் முதல் இரண்டு நாட்களில் 40 லிட்டர் பாலாரும், ஊட்டியில் 6 லிட்டர் பாலும் இந்த இயந்திரங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இயந்திரங்கள் குறித்த பொதுமக்களுக்குப் போதுமான விழிப்புணர்வும் விளம்பரமும் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு உத்தரவிட்டது. மேலும், தானியங்கி இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பாக்கெட் பால் விற்பனையை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும், தனியார் பால் நிறுவனங்களும் இதேபோன்று தானியங்கி விற்பனை இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்துள்ளனர்.