முதல்வர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி - உயர் நீதிமன்றம் உத்தரவு!
தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் தொடர்பான மிக முக்கிய சட்டப் பூர்வ தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் வருமான வரித்துறை விசாரணை அடிப்படையில், தற்போதைய முதல்வர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படத்தில் நடித்ததற்காகப் பெற்ற வருமானம் தொடர்பாக, அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். இதனை அடிப்படையாக வைத்துச் சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
'புலி' திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை முறையாகக் கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளார். இது குறித்து வருமான வரித்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில், தற்போதைய முதலமைச்சர் விஜய் மீது காவல் துறை முறைப்படி குற்றவியல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்" என்று தனது மனுவில் ராஜ்குமார் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் திடீர் திருப்பமாக மனுதாரர் தரப்பில் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, மனுதாரரான ராஜ்குமார் இந்த வழக்கைத் தான் தகுந்த காரணங்கள் ஏதுமின்றி, தன்னிச்சையாகத் 'திரும்பப் பெற்றுக் கொள்வதாக' நீதிமன்றத்தில் தெரிவித்தார். மனுதாரரின் இந்த வாக்குமூலத்தை முறைப்படி பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், முதல்வர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய அந்த மனுவை முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.