‘மாம்பழம்’ சின்னம் அன்புமணிக்கே - ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம்  உத்தரவு!

 

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னம் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வச் சின்னமான 'மாம்பழம்' சின்னத்தை முடக்கக் கோரி அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதன் மூலம் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணிக்கு மாம்பழம் சின்னம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

பாமக-வில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணமாக, அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் ஆகிய இருவரும் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், "உட்கட்சிப் பிரச்சினை முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும்" என மருத்துவர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்னிலையில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

"ஏற்கனவே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுச் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. புதுச்சேரி தேர்தல் பணிகளும் முடிந்துவிட்டன. ராமதாஸ் தரப்பினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 'சிலிண்டர்' சின்னத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், இப்போது சின்னத்தை முடக்கக் கோருவது செல்லத்தக்கதல்ல. தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் கட்சிச் சின்னத்தைப் பலிகடா ஆக்கக் கூடாது."

"தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி, முறையாகப் பதிவு செய்யப்பட்ட நிர்வாகிகளின் அடிப்படையில் அன்புமணி தலைமையிலான அணிக்குச் சின்னம் ஒதுக்கப்பட்டது. தற்போது தேர்தல் நடைமுறைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன." "கட்சியின் நிர்வாகக் குழு கூடி மருத்துவர் ராமதாஸைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. எங்களது கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்காததாலேயே நீதிமன்றத்தை நாடினோம்."

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, "தேர்தல் நடைமுறைகள் முடிவடைந்து, வாக்குப்பதிவு மட்டுமே மீதமுள்ள இந்தச் சூழலில் சின்னத்தை முடக்க உத்தரவிட முடியாது" எனக் கூறி ராமதாஸ் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இந்தத் தீர்ப்பின் மூலம், வரும் சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான வேட்பாளர்கள் 'மாம்பழம்' சின்னத்திலும், மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான வேட்பாளர்கள் 'சிலிண்டர்' சின்னத்திலும் போட்டியிடுவது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.