இயக்குநர் கவுதம் மேனன் மீதான வருமான வரி வழக்கை ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு!
பிரபல திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான கவுதம் வாசுதேவ் மேனன் மீது வருமான வரித்துறை தொடர்ந்திருந்த குற்றவியல் வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'போட்டான் கதாஸ் புரொடக்ஷன்' என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், கடந்த 2013-14 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டது. வரி ஏய்ப்பு செய்ய முயன்றதாகக் கூறி, அந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்த வெங்கட்ராமன், கவுதம் மேனன், ரேஷ்மா கடாலா உள்ளிட்டோர் மீது வருமான வரித்துறை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கவுதம் மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது வழக்கறிஞர் ரேவதி மணிவண்ணன் முன்வைத்த வாதங்கள்: கவுதம் மேனன் அந்த நிறுவனத்தின் இயக்குநராக ஜூன் 1, 2010-ல் நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் மே 2, 2011-லேயே தனது பதவியிலிருந்து விலகிவிட்டார்.
அவர் முறையாகப் பதவி விலகியதற்கான 'ஃபார்ம் 32' ஆவணங்கள் கம்பெனிகள் பதிவாளரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வருமான வரித்துறை குறிப்பிடும் 2012-13 நிதியாண்டில், அவர் அந்த நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளிலோ அல்லது நிர்வாகத்திலோ இல்லை.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், கவுதம் மேனன் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டார். அவர் முறையாகப் பதவிலகியதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, அவர் மீது தொடரப்பட்ட வழக்கை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டார். இருப்பினும், அந்த நிறுவனத்தின் மற்ற இயக்குநர்கள் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்றும், அதனை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.