டெட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் வருகிற ஜூலை 24-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 5 சதவீதம் வரை குறைத்து சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல பொதுப்பிரிவைச் சேர்ந்த தேர்வர்களுக்கும் 5 சதவீத மதிப்பெண்களைக் குறைக்கக் கோரி 3 ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
தங்களது மனுவில், தகுதி மதிப்பெண்களைக் குறைப்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் வரை தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் முக்கிய விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டது. பொதுப்பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களைக் குறைப்பது தொடர்பாக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும், இதுகுறித்து விரைவில் ஒரு முக்கியக் கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அரசின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கொள்கை முடிவு எடுப்பதற்காகத் தமிழக அரசிற்குக் கால அவகாசம் வழங்கியது. மேலும், அதுவரை அதாவது வருகிற ஜூலை 24-ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடக் கூடாது என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையைத் தள்ளிவைத்துள்ளது.