"அன்று சென்னைக்கு ஓடிவிட்டார்" - CM விஜய் பேச்சுக்கு டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம்!

 

கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முந்தைய திமுக ஆட்சியைக் கடுமையாக விமரிசித்துப் பேசிய முதலமைச்சர் விஜய்க்கு, திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தற்பொழுது மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் விபத்து நடந்த தினத்தில் தவெக மற்றும் விஜய்யின் செயல்பாடுகள் மிகவும் சுயநலமாக இருந்தன என டி.கே.எஸ். இளங்கோவன் சாடியுள்ளார்.  "கரூரில் தவெக நடத்திய மாநாட்டுப் பகுதியில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாகக் குடிக்கக் கூடத் தண்ணீர் இன்றிப் பச்சைக் குழந்தைகளும், பெண்களும் மயங்கி விழுந்தபோது அங்கிருந்த தவெகவினர் அவர்களுக்கு எவ்வித உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்."

"அங்குப் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காக்கக் களத்தில் இறங்கி உதவியவர்கள் திமுகவினர்தான். ஆனால், தன் கண் முன்னாலேயே மக்கள் நெரிசலில் சிக்கித் தவித்தபோது எதைப் பற்றியும் கவலைப்படாமல் விஜய் உடனடியாகச் சென்னைக்கு ஓடிவிட்டார்" என்று குற்றம் சாட்டினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தற்பொழுது அரசு வேலை மற்றும் நிவாரணங்களை வழங்கி விஜய் அரசியல் நாடகம் ஆடுவதாக அவர் விமரிசித்துள்ளார்.

"அன்று விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அப்பாவி மக்களை ஒருமுறை கூட மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்க்கத் துப்பற்றவர் தான் இந்த விஜய்." "அன்று தவறு முழுவதையும் தன் பக்கமே வைத்துக் கொண்டு, தற்போது 285 நாட்களுக்குப் பிறகு கரூருக்குச் சென்று முந்தைய ஆட்சியின் மீதும், காவல் துறையின் மீதும் பழி போடுவது தங்களின் சொந்தக் குற்றத்தை மூடிமறைப்பதற்காகச் செய்யும் அப்பட்டமான திசைதிருப்பும் வேலை" என டி.கே.எஸ். இளங்கோவன் காரசாரமாகச் சாடியுள்ளார்.