தற்கொலைக்கு எல்லாம் முயன்றாரே... அஜிதாவுக்கு சீட் மறுப்பு.. தூத்துக்குடியில் விஜய் நண்பர் ஸ்ரீநாத் போட்டி!

 

2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தவெக சார்பில் யார் களம் காண்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், நடிகர் ஸ்ரீநாத்தை வேட்பாளராக விஜய் அறிவித்துள்ளார். இது ஒருபுறம் ஆச்சரியத்தை அளித்தாலும், மறுபுறம் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

விஜய்யின் பள்ளித் தோழரும், 'நாளைய தீர்ப்பு' உள்ளிட்ட படங்களில் அவருடன் நடித்தவருமான நடிகர் ஸ்ரீநாத், தற்போது தூத்துக்குடி தொகுதி வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஜய்யின் மிக நெருக்கமான நண்பர் என்பதால் அவருக்கு இந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தூத்துக்குடி தொகுதியில் தவெக காலூன்றுவதற்கு ஆரம்பத்திலிருந்தே களத்தில் இறங்கித் தீவிரமாக வேலை செய்தவர் அஜிதா. தூத்துக்குடியில் தவெக-வுக்குப் பலமான வாக்கு வங்கி உருவாக அஜிதாவின் களப்பணியே முக்கியக் காரணம் எனப் பலரும் நம்பினர். ஆனால் உள்ளூர் நிர்வாகிகளிடையே நிலவிய கோஷ்டி மோதல் மற்றும் உட்கட்சிப் பூசல்களால் அஜிதாவுக்கு சீட் மறுக்கப்பட்டு, ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து மக்கள் பணியாற்றியும் தனக்குப் பதவி மற்றும் சீட் கிடைக்காத விரக்தியில், அஜிதா முன்னதாகத் தற்கொலை முயற்சி வரை சென்றதாகத் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. தவெக-வின் பெண் நிர்வாகி ஒருவர் இத்தகைய எல்லைக்குச் சென்றது தலைமையின் கவனத்திற்குச் சென்றும், இறுதியில் ஸ்ரீநாத்தே வேட்பாளராக உறுதி செய்யப்பட்டுள்ளார்.

திமுக மற்றும் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் தூத்துக்குடியில், உள்ளூர் நிர்வாகிகளின் அதிருப்தியைச் சமாளித்து ஸ்ரீநாத் எப்படி வெற்றியை ஈட்டப்போகிறார் என்பதே இப்போதைய சவாலாக உள்ளது.