தலை துண்டிப்பு... வாலிபரை அடித்துக் கொன்று தின்ற 4 சிங்கங்கள்... குஜராத்தில் பயங்கரம்!

 

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் வேலை முடிந்து இரவு தாமதமாக வீடு திரும்பிய உத்தரகாண்ட் மாநில வாலிபர் ஒருவரை, நான்கு சிங்கங்கள் கொண்ட கும்பல் ஒன்று மிகக் கொடூரமாகக் கடித்துக் குதறித் தின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறை மற்றும் உள்ளூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர், குஜராத்தின் ராஜுலா வனப்பகுதிக்குட்பட்ட அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன் தினம் இரவு ஹோட்டல் வேலையை முடித்துவிட்டு அவர் தனியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜுலா கோவயா கிராமத்துச் சாலையில் உள்ள புதரில் மறைந்திருந்த சிங்கம் ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்து தாக்கியுள்ளது.

அந்த வாலிபரைக் கடித்துக் கொன்ற சிங்கம், அவரது உடல் பாகங்களைச் சாப்பிட்டுவிட்டுச் சில பாகங்களை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றுள்ளது. நேற்று அதிகாலை கோவயா கிராம மக்கள் அந்தச் சாலை வழியாகச் சென்றபோது, வாலிபரின் துண்டிக்கப்பட்ட தலையும் சில உடல் பாகங்களும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு உறைந்து போயினர்.

உடனே காலை 6 மணியளவில் இதுகுறித்து வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு அவசரத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், வாலிபரின் எஞ்சிய உடல் பாகங்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த வாலிபரை ஒரு சிங்கம் மட்டும் தாக்கவில்லை என்றும், மொத்தம் 4 சிங்கங்கள் அடங்கிய ஒரு குழு அந்தப் பகுதியில் மனிதர்களை வேட்டையாடி வருவதும் உறுதி செய்யப்பட்டது.

மேலும், கோவயா கிராமத்திற்கு அருகிலுள்ள பகோதர் கிராமத்திலும் அண்மையில் இதேபோன்று வனவிலங்குகள் மனிதர்களைத் தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கோவயா கிராம பஞ்சாயத்துத் தலைவர் ஜீனா லக்னோத்ரா கவலையுடன் தெரிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து ராஜுலா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) ஹிரா சோலங்கி மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசியச் சிங்கங்களின் புகலிடமான குஜராத்தில், மனிதர்கள் சிங்கங்களுக்கு இரையாகும் அவலம் தொடர்வது மிகுந்த வருத்தமளிக்கிறது. காடுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை தற்பொழுது கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் அவை நுழைவதைத் தடுக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் வனத்துறை ஊழியர்களின் எண்ணிக்கையை அரசு உடனடியாக அதிகரிக்க வேண்டும்.

இது தொடர்பாக மாநில வனத்துறை அமைச்சகத்திற்குத் தான் அவசரக் கடிதம் எழுதியுள்ளதாகவும் சட்டமன்ற உறுப்பினர் ஹிரா சோலங்கி தெரிவித்துள்ளார். சிங்கங்கள் மனிதர்களைக் கொன்று தின்ற சம்பவம் அம்ரேலி மாவட்டக் கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.