பெரம்பூரில் தலையில்லாத சடலம் வழக்கில் திடீர் திருப்பம்... காட்டிக்கொடுத்த பார்கோடு... கள்ளக்காதலைக் கண்டுப்பிடித்த போலீசார்!
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட தலை இல்லாத ஆண் சடலம் குறித்த கொலை வழக்கில், உடையில் இருந்த ஒரு சிறிய 'பார்கோடு' துப்பை வைத்து, கொலையாளிகளான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கள்ளக்காதல் ஜோடியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பெரம்பூர் ரயில் நிலைய வளாகப் பகுதியில், தலை இல்லாத நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. கொலையுண்ட நபர் யார்? அவரைக் கொலை செய்தது யார்? என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் திகைத்து நின்ற காவல் துறையினருக்கு, கொலையாளி வீசிச் சென்ற சடலமே ஒரு முக்கியத் துப்பைக் கொடுத்துள்ளது.
கொல்லப்பட்ட நபரின் உடலில் இருந்த ஆடைகளைத் தீவிரமாக ஆய்வு செய்த தனிப்படை போலீசார், அதில் தையல் கடை அல்லது துவைக்கக் கொடுக்கப்பட்டதற்கான ஒரு சிறிய 'பார்கோடு' லேபிள் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.
உடனடியாக அந்த பார்கோடு விபரங்களை நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் ஸ்கேன் செய்து சோதித்த போது, அது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அலி என்பவருடையது என்பது அம்பலமானது. இந்த ஒற்றை க்ளூ மூலம் விசாரணையை முடுக்கிய போலீசாருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தன.
போலீசாரின் தீவிர விசாரணையில், கொலை செய்யப்பட்ட அமீர் அலியின் இரண்டாவது மனைவி ரோகிமா என்பதும், அவருக்கும் அஷ்ரப் என்ற இளைஞருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் கள்ளக்காதல் இருந்து வந்ததும் தெரியவந்தது. தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் அமீர் அலியைத் தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, அமீர் அலியைத் திட்டமிட்டுத் தந்திரமாகக் கொலை செய்துவிட்டு, அடையாளம் தெரியாமல் இருக்க அவரது தலையைத் துண்டித்துவிட்டு, உடலை மட்டும் பெரம்பூர் ரயில் நிலையத்தில் வீசிச் சென்றுள்ளனர். தற்போது கொலையாளிகளான ரோகிமா மற்றும் அவரது கள்ளக்காதலன் அஷ்ரப் ஆகிய இருவரையும் போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.
எவ்வித துப்பும் இல்லாத ஒரு கொலை வழக்கை, ஆடையில் இருந்த ஒரு சிறிய பார்கோடு தொழில்நுட்பம் மூலம் சென்னை போலீசார் 24 மணி நேரத்திற்குள் துப்பறிந்து கொலையாளிகளைக் கைது செய்துள்ள விதம், பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.