தலைமை ஆசிரியை வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை: அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் அதிர்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்கடாசலபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முத்துமாரி.இவரது வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். தனது மகளைப் பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு வீடு திரும்பிய முத்துமாரி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அப்பகுதியில் நேற்று ஒரே நாளில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து மூதாட்டி ஒருவர் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தத் துணிகரக் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து அரங்கேறிவரும் இது போன்ற குற்றச் சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து தடயங்களைச் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.