பெரும் சோகம்... அண்ணன் மரணம் அடைந்த 3 மணி நேரத்தில் தம்பியும் மாரடைப்பால் உயிரிழப்பு!
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் அண்ணன் மாரடைப்பால் மரணமடைந்த அதிர்ச்சியில் தம்பியும் அடுத்த மூன்று மணி நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காசர்கோடு மாவட்டம் கும்படாஜே கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட உப்ரன்கலா பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ண பட் (வயது 70) மற்றும் இவரது தம்பி கேசவ பட் (65) ஆவர். திருமணமாகாத இவர்கள் இருவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்தனர். சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் ராமகிருஷ்ண பட் மாட்டுத்தொழுவத்திற்குச் சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
அண்ணனின் உடலைப் பார்த்துத் தம்பி கேசவ பட் கதறி அழுத நிலையில், அதே இரவில் 10 மணி அளவில் அவரும் திடீரென நெஞ்சுவலிப்பதாகக் கூறி வீட்டிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கேசவ பட்டும் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி அடுத்தடுத்து உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.