கனமழை.. 126 கீ.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று... ஜப்பானை உலுக்கிய ஜாங்மி புயல் கரையைக் கடந்தது!
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடற்கரைப் பகுதிகளை 'ஜாங்மி' என்னும் தீவிர வெப்பமண்டலப் புயல் தாக்கியுள்ளது.
தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்புயல் கரையை கடந்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் உருவான இந்தத் தீவிரப் புயல், ஜப்பனியக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வந்து நேற்று காலை நிலச்சரிவை ஏற்படுத்தியது.
ஜப்பானிய உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணியளவில், அந்நாட்டின் தென்பகுதியில் உள்ள வக்கா யாமா மாகாணத்தில் மணிக்கு சுமார் 126 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் 'ஜாங்மி' புயல் மிக உக்கிரமாகக் கரையை கடந்தது.
புயல் கரையை கடந்ததைத் தொடர்ந்து, அது உள்நாட்டுப் பகுதிகளை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாகத் தலைநகர் டோக்கியோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் ஒட்டுமொத்தமாகப் பலத்த இடி, மின்னலுடன் கூடிய அதிதீவிரக் கனமழையாலும், சுழன்றடித்த சூறாவளிக் காற்றினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை தற்காலிகமாக முடங்கியது.
கடற்கரைப் பகுதிகளைப் பந்தாடிய 'ஜாங்மி' புயல், ஜப்பானின் நிலப்பரப்புக்குள் மேலும் ஊடுருவி நகர்ந்த போது அதன் வேகம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. ஜப்பானிய நிலப்பரப்பின் வறண்ட காற்று மற்றும் புவியியல் காரணங்களால் இப்புயல் தற்பொழுது முழுமையாக வலுவிழந்து சாதாரணக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் மீட்புப் பணிகளும், சீரமைப்புப் பணிகளும் தற்போது போர்க்கால அடிப்படையில் முடுக்கப்பட்டுள்ளன.