தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை.. வானிலை மையம் அறிவிப்பு!

 

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கான மழை நிலவரத்தைக் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று ஜூலை 12 ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 13 முதல் ஜூலை 16 வரையிலான  இந்த நான்கு நாட்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளைத் தவிர, தமிழ்நாட்டின் ஏனைய உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பில்லை. தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை ஒட்டி இருக்கும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.