இன்று தமிழகத்தில் கோவை, மதுரை, குமரி உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
மன்னார் வளைகுடா வரை நிலவி வரும் வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, இன்று தமிழகத்தின் கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 50 கிலோமீட்டர் வேக காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தெலங்கானா பகுதியில் தொடங்கி ராயலசீமா மற்றும் தமிழகப் பகுதிகள் வழியாக மன்னார் வளைகுடா வரை, வளிமண்டலத்தில் சுமார் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை ஒரு வலுவான வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வளிமண்டலச் சுழற்சி காரணமாக இன்று இரவு நேரங்களில் கோயம்புத்தூர் (மலைப்பகுதிகள்), நீலகிரி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, கன்னியாகுமரி மற்றும் மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 7 மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மரங்கள் மற்றும் மின் கம்பங்களுக்கு அருகே பொதுமக்கள் நிற்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பலத்த காற்றுடன் மிதமான மழை தொடரக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் ஜூன் 26ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதற்கும் வாய்ப்பில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பான அளவை ஒட்டியும், மழைப் பொழிவு இருக்கும் இடங்களில் இயல்பை விடக் குறைந்தும் காணப்பட்டு குளிர்ந்த சூழல் நிலவும்.