கோவை, நீலகிரியில் மிக கனமழை... கொட்டப் போகும் வானம்... 3 மாவட்டங்களுக்கு உச்சகட்ட அலர்ட்!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வட உள் கர்நாடகத்திலிருந்து குமரிக்கடல் வரை (தென் உள் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் வழியாக) ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. தெற்கு குஜராத்திலிருந்து கேரளா வரை மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது.
இந்நிலையில் இன்று நீலகிரி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 - 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோரத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், ஏனைய தமிழகப் பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், கோவை மலைப்பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள், வட கடலோரத் தமிழகம் மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 4 முதல் 8 வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோரத் தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை தொடரும்.
இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு வேளையில் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37°C வரை பதிவாகலாம். நாளை மாலை/இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.