குஜராத்தில் கனமழை... வெள்ளத்தில் சிக்கிய 790 பேரை மீட்டது இந்திய ராணுவம்!
தெற்கு குஜராத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், அகமதாபாத் மற்றும் தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் இந்திய ராணுவம் மேற்கொண்ட தீவிர மீட்புப் பணிகளின் மூலம், வெள்ளத்தில் சிக்கியிருந்த 790-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தெற்கு குஜராத்தில் தொடங்கிய இடைவிடாத கனமழை, அடுத்தடுத்த நாட்களில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவியது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வல்சாத் மற்றும் நவசாரி மாவட்டங்களில் மட்டும் 29 பேர் உயிரிழந்தனர். மாநிலம் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ராணுவத்தின் தெற்குப் படைப்பிரிவு ஜூலை 23 மாலை முதல் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளை தொடங்கியது. தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து நவசாரி, வல்சாத், வாபி, சில்வாசா, தோல்கா மற்றும் ராஜோடா உள்ளிட்ட பகுதிகளில் ராணுவக் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன.
வெள்ள நீரில் தவித்த 790-க்கும் மேற்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றிய ராணுவத்தினர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மருத்துவ உதவிகள், உணவு மற்றும் குடிநீர் வழங்கி இயல்பு நிலையை மீட்டெடுக்க உதவி வருகின்றனர்.