தென் மாவட்டங்களில் ஜில் மழை.. வடதமிழகத்தில் அனல் காற்று ... அடுத்த 4 நாட்களுக்கு வெயில் 3°C உயரும் - வானிலை மையம் எச்சரிக்கை!

 

தமிழகத்தில் கோடைக்காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாகச் சில மாவட்டங்களில் மழையும், சில மாவட்டங்களில் கடும் வெப்பமும் நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக இன்று (ஏப்ரல் 3) முதல் அடுத்த ஒரு வாரத்திற்குப் பின்வரும் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது: தென் தமிழகக் கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மலைப் பிரதேசங்களிலும் ஏப்ரல் 4 முதல் 6-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை ஒருபுறம் இருந்தாலும், சென்னை உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கப் போவதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு வடதமிழகத்தில் வெயிலின் தாக்கம் இயல்பை விட 3° செல்சியஸ் வரை உயரக்கூடும். வறண்ட வானிலை மற்றும் தரைக்காற்று வீசுவதால் வெப்பம் அதிகரித்து, அனல் காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மதிய நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகக் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மற்றும் திசையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் வானிலை முன்னறிவிப்புகளைக் கவனித்துச் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.