தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை... 3 மாவட்டங்களுக்கு 'மிக கனமழை' எச்சரிக்கை!

 

தமிழகக் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிவித்துள்ளது.

இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலான பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

திருப்பூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 2 முதல் 7 வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரும்.

ஆகஸ்ட் 1 முதல் 3 வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டி இருக்கும்.

தென்தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 65 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.