கேரளத்தில் கனமழை, நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி; 8 பேர் மாயம்... தேர்வுகள் ரத்து - சபரிமலைக்கு வரவேண்டாம் என தேவஸ்வம் அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, உறங்கிக் கொண்டிருந்த தாய், மகன் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கண்ணூர் காஞ்சிரப்புழா ஆற்றில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார். மேலும் கடலில் சீற்றம் காரணமாகப் படகுகள் கவிழ்ந்து திருவனந்தபுரம் முதலப்பொழி, விழிஞ்ஞம் மற்றும் கொல்லம் பகுதிகளில் 5 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். கோட்டயம், இடுக்கி, கண்ணூர் மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தாமரசேரி கணவாயில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் கிராமங்கள் நீரில் மூழ்கின. குறிப்பாக ரானி பகுதி முழுமையாக வெள்ளத்தால் சூழப்பட்டு வெளி உலகத் தொடர்பை இழந்துள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 10 அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. மலைப்பாதைகளில் போக்குவரத்து கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மழைக்கு 17 வீடுகள் முழுமையாகவும், 127 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 65 நிவாரண முகாம்களில் 1,465 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாளை சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெற உள்ள நிலையில், பம்பா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள் தங்களின் சபரிமலை யாத்திரையைத் தவிர்க்க வேண்டும் எனத் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
காசர்கோடு முதல் பத்தனம்திட்டா வரையிலான மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக எம்.ஜி. பல்கலைக்கழகம், ஸ்ரீநாராயண குரு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் மற்றும் மாநிலத் தகுதித் தேர்வு ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.