இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை... பத்திரமா இருங்க மக்களே!
கோடைக் காலத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று மாவட்டங்களின் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், கனமழையும் பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
திருச்சிராப்பள்ளி, நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், சேலம், ஈரோடு ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது:காற்றின் வேகம்: மேற்கண்ட மாவட்டங்களில் மழை பெய்யும் சமயங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வட உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தவிர, தமிழகத்தின் ஏனைய பிற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் இடி மின்னல் தாக்கத்தின் போது மின் கம்பங்கள், மரங்கள் மற்றும் விளம்பரப் பலகைகளின் அருகே நிற்பதையோ அல்லது வாகனங்களை நிறுத்துவதையோ தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.