தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்... பத்திரமா இருங்க மக்களே!
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது நாள் வரையில் நிலவி வந்த கடுமையான கத்திரி வெயிலின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வரும் வேளையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கப் போவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் இன்று மேகமூட்டங்கள் திரண்டு, ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மழையின் தீவிரம் மேலும் அதிகரித்து, தமிழகத்தின் பரப்பளவில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களை நனைக்கவுள்ளது. இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. குறிப்பாகக் கொங்கு மண்டலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை மழையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.
மழை மேகங்களின் நகர்வு மற்றும் கடல் பகுதியில் வீசும் பலத்த காற்றின் வேகம் காரணமாக, மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் குறிப்பிட்ட ஆழ்கடல் பகுதிகளுக்குள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.