இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகக் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, இன்று தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சி ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஏனைய தமிழகப் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.