இன்று சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் நிலவும் வளிமண்டலச் சூழல் காரணமாகச் சென்னை உள்பட ஐந்து மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை  நிலவி வருவதன் காரணமாக இந்த மழை வாய்ப்பு உருவாகியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

உள் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை இயல்பு நிலையை ஒட்டியே காணப்படும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.