undefined

இன்று முதல் மார்ச் 5 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

தமிழகத்தில் நிலவி வரும் வானிலை மாற்றங்கள் மற்றும் வரும் வாரத்திற்கான மழை வாய்ப்புகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று முதல் மார்ச் 5ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் இன்று காலை வரை பதிவான மழை அளவுகளில் தென்காசி மாவட்டம் ஆயிக்குடியில் அதிகபட்சமாக 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் செங்கோட்டை, வால்பாறை ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழையும், கன்னியாகுமரி மற்றும் தொண்டாமுத்தூரில் தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 34°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24°C ஆகவும் இருக்கக்கூடும். கடலோரப் பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.