சென்னையில் கனமழை எச்சரிக்கை -215 இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு!
சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சென்னையில் ஏற்படக்கூடிய மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளைத் திறம்பட எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சி சார்பில் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மழைக்கால பேரிடர்களைச் சமாளிக்கும் பொருட்டு, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 215 வெள்ள நிவாரண முகாம்களை உடனடியாகத் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை வெளியேற்றவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் 275 படகுகளும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்க 111 சமையல் கூடங்களும் முழுமையான ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி இந்த முன்னேற்பாடுகளைத் நேரில் ஆய்வு செய்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மேலும், மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான முறையில் மீட்டு, இந்த நிவாரண முகாம்களில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.