இந்தோனேசியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 8 பேர் பலி... அடர்ந்த வனப்பகுதியில் நேர்ந்த துயரம்!
இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் மாகாணத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பி.டி. மேத்யூ ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் எச்-130 (PK-CFX) ரக ஹெலிகாப்டர், நேற்று (ஏப்ரல் 16) தனது வழக்கமான பயணத்தின் போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டு, தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இன்று காலை செகடாவ் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஹெலிகாப்டர் நொறுங்கிக் கிடந்ததை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர். விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 8 பேரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய ஒருவரின் உடலைத் தேடும் பணி அடர்ந்த காடு மற்றும் மோசமான வானிலைக்கு மத்தியிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஹெலிகாப்டர் விபத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை. இயந்திரக் கோளாறு அல்லது மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு குழு (NTSC) இது குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.