கத்தாரில் ஹெலிகாப்டர் விபத்து: 6 பேர் பலி; ஒருவர் மாயம்!
கத்தார் நாட்டின் பிராந்தியக் கடல் பகுதியில் இன்று மதியம் நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பாக அந்நாட்டு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. கத்தார் ஆயுதப்படைக்குச் சொந்தமான இந்த ஹெலிகாப்டர், இன்று மதியம் தனது வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டரில் மொத்தம் 7 பேர் பயணம் செய்தனர். பறந்து கொண்டிருக்கும்போதே திடீரென ஏற்பட்ட கோளாறால் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கடலுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 7 பேரில் 6 பேர் உயிரிழந்துவிட்டதாகக் கத்தார் உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. எஞ்சிய ஒருவரைத் தேடும் பணியில் கத்தார் கடலோரக் காவல் படை மற்றும் சர்வதேசத் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். "தொழில்நுட்பக் கோளாறே இந்த விபத்திற்குக் காரணம்" என்று பாதுகாப்பு அமைச்சகம் தனது 'X' பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் அல்லது அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இதில் எந்தவிதமான வெளிநாட்டுத் தாக்குதல்களும் அல்லது சதிச் செயல்களும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது.