மலேசியாவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து - விமானி உட்பட 5 பேர் பலி!
Sep 10, 2026, 08:15 IST
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் காட்டுப் பகுதிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு மருத்துவச் சேவைகளை வழங்கி வரும் 'பறக்கும் டாக்டர்கள்' சேவைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பழங்குடியின மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, விமானி மற்றும் மருத்துவ ஊழியர்கள் உட்பட ஐவருடன் புறப்பட்டுச் சென்ற ஹெலிகாப்டர் லாங் லேலாங் விமான ஓடுதளம் அருகே விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டர் திடீரெனக் காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கிராமப்புற மக்களுக்கு அவசர மருத்துவ உதவி அளிக்கும் திட்டத்தில் ஏற்பட்ட இத்தகைய விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.