ஜவ்வாது மலையில் தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர் - அச்சத்தில் மலைவாழ் மக்கள்!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள ஜவ்வாது மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஹெலிகாப்டர் ஒன்று மிகத் தாழ்வாகப் பறந்து வட்டமிட்டு வருவது அப்பகுதி மலைவாழ் மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அல்லேரி மலைப்பகுதியில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள நீர்மின் திட்டம் தொடர்பாக ஏற்கனவே அப்பகுதி மக்களிடையே பல்வேறு எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் நீடித்து வருகின்றன.
இந்நிலையில் ஜவ்வாது மலையின் ஜமுனாமரத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தொடர்ந்து தாழ்வாகப் பறந்து வரும் இந்த ஹெலிகாப்டருக்கும், குறித்த நீர்மின் திட்டத்தின் ஆய்வுகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என கிராம மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
எந்தவொரு முன்அறிவிப்பும் இன்றித் தொடர்ச்சியாகப் பறக்கும் இந்த ஹெலிகாப்டர் எந்தத் துறையின் சார்பில், எதற்காக ஆய்வு மேற்கொண்டு வருகிறது என்பது குறித்த உண்மையான விவரங்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.