பகீர் வீடியோ... காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 ஹெலிகாப்டர்கள் மோதி பலி!

 

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் அருகே காட்டுத்தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். ஏதென்ஸ் மேற்குப் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஹெலிகாப்டர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. அப்போது குறைந்த உயரத்தில் பறந்து தண்ணீர் ஊற்ற முயன்றபோது, இரு ஹெலிகாப்டர்களின் சுழல் இறக்கைகள் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கோர விபத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவரும், கிரேக்க தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். ஆஸ்திரேலிய நிறுவனத்திடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட பெல் வகையைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டர்கள் மோதியதில் தீப்பிடித்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கின. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் விபத்து நடந்த பகுதியில் தீவிரமான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமானிகளும் அதிகாரிகளும் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும்போது இதுபோன்ற ஆபத்துகள் ஏற்படுவது கவலையைத் தந்துள்ளது. விபத்துக்கான முழுமையான காரணங்கள் குறித்துக் காவல்துறையினரும் விமானப் போக்குவரத்து அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.