மகளிர் உரிமைத் தொகை பெற இதைச் செய்யுங்க - எளிய வழிமுறைகள்!

 

தமிழ்நாடு அரசின் மிக முக்கியத் திட்டமான 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் போது, குடும்ப அட்டையில் குடும்பத் தலைவராகப் பெண்ணின் பெயர் தான் இருக்க வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆன்லைன் நடைமுறைகளைப் பார்க்கலாம். 

பொதுமக்கள் மத்தியில் நிலவும் மிக முக்கியச் சந்தேகத்திற்குத் துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஒரு குடும்ப அட்டையில் கணவர் அல்லது குடும்பத்தின் பிற ஆண்கள் பெயர் 'குடும்பத் தலைவர்' என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அந்தக் குடும்பத்தில் உள்ள தகுதியுள்ள பெண் இத்திட்டத்திற்குத் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

குடும்பத் தலைவர் பெயர் மாற்றத்திற்காகக் காத்திருக்காமல், தகுதியுடைய பெண்கள் நேரடியாகவே மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து வழங்கலாம். குடும்பத் தலைவராக ஆண் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படாது.

ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் பெயரை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?

ஒருவேளை எதிர்காலத் தேவைகளுக்காக அல்லது தங்களின் விருப்பத்தின் பேரில் குடும்ப அட்டையில் குடும்பத் தலைவராகப் பெண்ணின் பெயரை மாற்ற விரும்பினால், அதை இ-சேவை மையங்களுக்கு அலைச்சல் இன்றி வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் எளிதாக மாற்ற முடியும். முதலில் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpds.gov.in என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட தங்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணை உள்ளிட்டு, வரும் OTP குறியீட்டைப் பதிவிட்டு 'பயனர் நுழைவு' செய்ய வேண்டும். உள்ளே சென்றதும் மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் பிரிவில், "குடும்பத் தலைவர் மாற்றம்" என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

புதிய குடும்பத் தலைவராக மாற்ற விரும்பும் பெண்ணின் பெயரைத் தேர்ந்தெடுத்து, அதற்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டும். பின்னர், அவரது புதிய புகைப்படத்தையும், முகவரிச் சான்று அல்லது தகுந்த ஆவணத்தையும் (ஆதார் கார்டு போன்றவை) ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.

விவரங்கள் அனைத்தையும் சரிபார்த்து 'சமர்ப்பி' பொத்தானை அழுத்தினால், திரையில் ஒரு குறிப்பு எண் தோன்றும்.

விண்ணப்பித்த பிறகு தங்களின் விண்ணப்பம் எந்தப் பரிசீலனையில் உள்ளது என்பதை அதே TNPDS இணையதளத்தில் உள்ள "அட்டை பிறழ்வு கோரிக்கையின் நிலை" (Card Mutatute Status) என்ற பிரிவில், உங்களிடம் உள்ள 'Reference Number'-ஐ உள்ளிட்டு உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும்.

வட்ட வழங்கல் அதிகாரி தங்களின் ஆவணங்களைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்தவுடன், குடும்பத் தலைவர் பெயர் ஆன்லைனில் வெற்றிகரமாக மாற்றப்பட்டுவிடும். எனினும், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க இம்மாற்றம் கட்டாயமில்லை என்பதால் தகுதியுள்ள பெண்கள் உடனடியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.