'ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க' - செல்லூர் ராஜூ கலாய்!
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்தும் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் தவெகவை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இந்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ, தாம் தவெக மற்றும் திமுகவில் இணையப் போவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.
எப்போதும் தனது எதார்த்தமான பேச்சுகளாலும், நகைச்சுவையான விமர்சனங்களாலும் கவனம் ஈர்க்கும் செல்லூர் ராஜூ, இந்த வதந்திகளைத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாகக் கலாய்த்துப் பதிவிட்டுள்ளார்.
தனது அரசியல் நிலைப்பாடு குறித்துச் செல்லூர் ராஜூ, "ஏப்பா, ஏய்! எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க. நான் என்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில் தான் பயணிப்பேன். புரட்சித் தலைவர் ஏழைகளின் நன்மைக்காக உருவாக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான் என் வழி."
அண்மைக் காலமாக அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் சிலர் தங்களது அரசியல் எதிர்காலம் கருதி ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்து வரும் சூழலில், மதுரையின் முக்கிய முகமான செல்லூர் ராஜூவும் கட்சி மாறப் போகிறார் என்றும், அவர் திமுக அல்லது தவெக தலைமைக்கு நெருக்கமானவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும் இணையத்தில் செய்திகள் தீயாய்ப் பரவின.
தற்பொழுது அதற்குத் அவரே நேரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளதன் மூலம், தான் என்றும் இரட்டை இலை சின்னத்தின் பக்கமே உறுதியாக நிற்பேன் என்பதைத் தொண்டர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். இவரது இந்த ட்வீட் தற்பொழுது அதிமுக தொண்டர்களாலும், நெட்டிசன்களாலும் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.