மருத்துவமனை கழிவறையில் ரகசிய கேமரா... ஆபாச வீடியோ எடுத்த ஊழியருக்கு தர்ம அடி... வைரல் வீடியோ!
கொல்கத்தாவில் உள்ள ரூபி பொது மருத்துவமனையில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர சம்பவம் ஒட்டுமொத்தப் பெண்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மருத்துவமனைக்கு வந்த பெண்கள் அங்குள்ள கழிவறையைப் பயன்படுத்தியபோது, ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் கேமராவைக் கண்டு உறைந்து போயினர். உடனடியாக அவர்கள் கூச்சலிடவே, அங்கிருந்த ஒரு மருத்துவமனை ஊழியர் அந்த செல்போனை எடுத்துக்கொண்டு தப்பியோட முயன்றார். ஆனால், அங்கிருந்த பொதுமக்கள் அவரை விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் இடமாக கருதப்படும் மருத்துவமனையிலேயே இப்படி ஒரு இழிவான செயல் நடந்திருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஊழியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னதாக எத்தனை பெண்களை இதுபோல ரகசியமாகப் படம்பிடித்தார் மற்றும் அந்த வீடியோக்கள் இணையதளங்களில் ஏதேனும் பகிரப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பதறவைக்கும் சம்பவம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை கிடைக்காது என்ற தைரியமே இதுபோன்ற செயல்களுக்குக் காரணம் எனப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களுக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடுமையான சட்டங்கள் மற்றும் கண்காணிப்பு முறைகள் தேவை எனப் போராட்டங்கள் வெடித்துள்ளன.