உதயநிதியின் பேட்டிகளை உடனடியாக நீக்க உயர் நீதிமன்றம் ஆணை! 

 

கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியருக்குத் தவெக எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட ஏற்கனவே நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இவ்வழக்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அளித்த பேட்டி மற்றும் வீடியோக்களைச் சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ. அருள்விக்னேஷ் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சிருஷ்டி சிங் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியம் மற்றும் வழக்கின் விசாரணையைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது.

இந்நிலையில் நீதிமன்றத் தடையையும் மீறி இவ்வழக்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தவறான கருத்துகளை வெளியிட்டு வருவதாகக் காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முறையிடப்பட்டது.

காவல்துறை மற்றும் அரசுத் தரப்பின் இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இவ்வழக்கு தொடர்பாக உதயநிதி அளித்த பேட்டிகள் மற்றும் அது தொடர்பான வீடியோக்களைச் சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.