பத்திரப்பதிவு நடைமுறையில் மாற்றம் - 34சி சட்டத் திருத்தத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

 

தமிழகத்தில் சொத்துப் பத்திரப்பதிவு மற்றும் வில்லங்கச் சான்றிதழ் பெறும் நடைமுறைகளில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய உத்தரவு ஒன்றைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தற்பொழுது பிறப்பித்துள்ளது. பொதுமக்களின் சொத்துப் பாதுகாப்பு மற்றும் பத்திரப்பதிவுச் சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கில் நீதிபதிகள் இந்த உத்தரவை அரசுக்கு வழங்கியுள்ளனர்.

சொத்துகள் தொடர்பான வில்லங்கச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு, இனிவரும் காலங்களில் அந்தச் சொத்தின் சர்வே எண் மற்றும் கதவு எண் ஆகிய துல்லியமான விவரங்களுடன் கூடிய ஈசி ஆவணத்தைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம் சொத்து விவரங்களில் ஏற்படும் குழப்பங்கள் மற்றும் மோசடிகள் பெருமளவில் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கின் மிக முக்கியத் தீர்ப்பாக, தமிழக அரசு கடந்த காலங்களில் கொண்டு வந்திருந்த பத்திரப்பதிவுச் சட்டத்தின் '34சி'  சட்டத் திருத்தத்தை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஒரு சொத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றால், அச்சொத்தின் அசல் ஆவணம் கண்டிப்பாக இருக்க வேண்டும்; அசல் ஆவணம் இல்லை என்றால் ஆவணப் பதிவுகளைச் செய்ய இயலாது என்பதே இந்த 34சி சட்டத் திருத்தமாகும். அசல் ஆவணங்கள் தொலைந்துபோன சூழலிலோ அல்லது இதர குடும்பச் சிக்கல்களிலோ இந்த விதிமுறை பொதுமக்களைக் கடுமையாகப் பாதிப்பதாகக் கூறி, இந்தத் திருத்தத்தை நீதிமன்றம்  ரத்து செய்துள்ளது.

இதன் மூலம் அசல் ஆவணங்கள் உடனடியாகக் கையில் இல்லாத நிலையிலும் தகுந்த மாற்று ஆவணங்களைக் கொண்டு பத்திரப்பதிவு செய்வதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு மீண்டும் கிடைத்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு, தமிழகப் பத்திரப்பதிவுத் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.