எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ... வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் கிடையாது.. தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதை எதிர்த்து அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஐகோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஒரே காரணத்திற்காக ஏன் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தனர்.
இதையடுத்து, இந்த மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.அப்போது சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 8ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையே தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், தேர்தல் வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு தற்போதைக்கு தேர்தல் அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது