'போராட்டங்களில் பங்கேற்கக் கூடாது' - உயர்கல்வி நிறுவனங்கள் உத்தரவு!

 

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மாணவர்கள் யாரும் போராட்டங்களில் பங்கேற்கக் கூடாது என உயர் கல்வி நிறுவனங்கள் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளன.

டெல்லி பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு முக்கிய உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வரும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு மாணவர்கள் யாரும் செல்லக்கூடாது என்றும், அங்கு நடைபெறும் போராட்டங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கேற்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள் பெருமளவில் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் தரப்பில் இந்தத் தடை உத்தரவு குறித்து, ஜந்தர் மந்தரில் தொடர்ந்து குவிந்து வரும் கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டும், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுமே இந்த முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி நிறுவன நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் ஆன்லைன் உணவு சேவைகள் மூலம் மாணவர்களுக்கு ஆதரவு பெருகி வரும் சூழலில், மற்றொருபுறம் கல்வி நிறுவனங்களின் இந்தத் தடை உத்தரவு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.