வந்தே பாரத் ரயில்களில் விமானங்களுக்கு இணையான உயர்தர உணவு.. 3 ரயில்களில் அறிமுகம்!

 

பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், 3 முக்கிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் விமானங்களில் வழங்கப்படுவதைப் போன்ற உயர்தர உணவு சேவையை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. உணவின் தரம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்தப் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மும்பை – பெங்களூரு, ஹவுரா – காமாக்யா, டெல்லி – வாரணாசி ஆகிய 3 வழித்தடங்களில் உயர்தர உணவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பயணிகளுக்குச் சுவையான மற்றும் ஆரோக்கியமான காலை உணவாக இட்லி, வடை, அவல் (போஹா) அல்லது உப்புமா உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. மதியம் மற்றும் இரவு நேரப் பயணத்தின்போது சப்பாத்தி, சாதம், பருப்பு (தால்), சிக்கன் அல்லது சைவ உணவு வகைகள் விமானங்களில் பரிமாறப்படுவதைப் போன்ற நேர்த்தியான தரத்திலும் சுகாதாரமான முறையிலும் வழங்கப்படுகின்றன.

நீண்ட தூரப் பயணிகளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், உணவின் தரம், சுகாதாரம் மற்றும் பரிமாறும் முறையைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கிலும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.