ஸ்ரீரங்கம் கோவிலில் பர்தா அணிந்த இளம்பெண் - தீவிர விசாரணை நடத்த இந்து தமிழர் கட்சி கோரிக்கை!

 

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வளாகத்தில் பர்தா அணிந்த பெண் ஒருவர் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் உடனடியாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என இந்து தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் ராம ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் முக்கியப் பகுதியான கருட மண்டபம் வரை முஸ்லிம் அடையாள உடையான பர்தா அணிந்த பெண் ஒருவர் சென்றுள்ளார். கோவிலின் பாதுகாப்பு நடைமுறைகளை மீறி, பிற மத அடையாளத்துடன் வந்த நபரை உள்ளே அனுமதித்தது எப்படி எனக் கேள்வி எழுப்பியுள்ள ராம ரவிக்குமார், இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகமும் காவல்துறையும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், "கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோவில்களில் பிற மதத்தினர் நுழைவதைக் கட்டுப்படுத்தும் கடுமையான விதிமுறைகள் அமலில் உள்ளன. அதே போன்று, தமிழ்நாட்டிலும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தி, பிற மதத்தினரின் நுழைவைக் கட்டுப்படுத்தும் விதிகளைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் ஸ்ரீரங்கம் பகுதியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.