வரலாற்று சந்திப்பு... டிரம்ப், புதின், ஜி ஜின்பிங் முதல் கூட்டுச் சந்திப்பு எப்போது, எங்கு நடைபெறுகிறது?!

 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய மூன்று உலகத் தலைவர்களும் முதன்முறையாக ஒன்றாகச் சந்தித்துப் பேசவுள்ள அதிகாரப்பூர்வ தேதி மற்றும் இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் குவாங்டொங் மாகாணம் சென்சென்  நகரில் நடைபெறவுள்ள 33-வது ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இதற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 21 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பின் மாநாடு வரும் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சீனாவில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, மூன்று நாடுகளின் தலைவர்களும் வரும் நவம்பர் 19-ஆம் தேதி கூட்டாகச் சந்திக்கின்றனர்.

டிரம்ப், புதின் மற்றும் ஜி ஜின்பிங் ஆகிய மூன்று தலைவர்களும் ஒரே மேடையில், ஒன்றாகக் கூட்டுச் சந்திப்பு நடத்துவது இதுவே வரலாற்றில் முதல் முறையாகும். இதனால் உலக நாடுகளின் பார்வை தற்போது சென்சென் நகரை நோக்கித் திரும்பியுள்ளது.

மத்திய கிழக்குப் போர், உக்ரைன் - ரஷ்யா போர், சர்வதேச வர்த்தக மோதல்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது உள்ளிட்ட உலகளாவிய மிக முக்கியமான பல முக்கியப் பிரச்சினைகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட உள்ளது.

தற்போதைய சர்வதேச அரசியல் சூழ்நிலையில், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகளின் தலைவர்களின் இந்த நேரடிச் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.